தூத்துக்குடியில் முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் குறித்து அவதூறாக முகநூலில் பதிவிட்ட பாஜக நிர்வாகியைப் போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியில் மாவட்டத் துணை அமைப்பாளராக உள்ளார். இவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அந்தப் புகாரில், “பேஸ்புக்கில் செல்வ பாலா செல்வா என்னும் பெயரில் ஒருவர் இயங்கி வருகின்றார். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ், செந்தில் பாலாஜி, பி.டி,ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோரது படங்களை மோசமாக சித்தரித்தும், அவதூறு கருத்துக்களை எழுதியும் வெளியிட்டு உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில் முகநூலில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாகப் பதிவிட்டது தூத்துக்குடி குலையன்சரிசல் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வபாலன்(29) எனத் தெரியவந்தது. எலக்ட்ரீசியனான இவர் பாஜகவில் தகவல் தொழில்நுட்ப அணியில் உள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து செல்வபாலன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்தனர்.