விருப்ப ஓய்வு பெற்று கோடிக்கணக்கில் கமிஷன் வசூல்: ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் காவலர்!

By காமதேனு

வாடிக்கையாளர்களிடம் இருந்து 500 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்து கோடிக்கணக்கில் கமிஷன் பெற்ற முன்னாள் தலைமைக் காவலரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் சென்னை, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதியில் கிளை நிறுவனங்களை நிறுவி வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் தொகைக்கு மாதம் 10 சதவீதம் வட்டி தருவதாக 84 ஆயிரம் பேரிடம் 5.900 கோடி வசூலித்தது. இந்நிறுவனம் கூறியது போல் முதலீட்டாளர்களுக்கு வட்டி மற்றும் முதலீட்டு தொகையை தராமல் ஏமாற்றியதால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவல் புகார் அளித்தனர். அப்புகாரில் நிறுவன உரிமையாளர்கள், ஏஜென்டுகள் உட்பட 21 பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தப் புகாரில் 7 பேரை கைது செய்யப்பட்டனர். 1.14 கோடி ரொக்கம் மற்றும் 39 கோடி மதிப்புடைய அசையா சொத்துக்கள், 18 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், பல்வேறு வங்கிக்கணக்குகளில் இருந்த 121 கோடி பணத்தை முடக்கினர்.

மேலும் வெளிநாட்டு பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ள போலீஸார், வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இயக்குநர்கள் லட்சுமி நாராயணன்,

வேத நாராயணன், ஜனார்த்தன் உட்பட 4 பேரை பிடிக்க ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை காவல்துறை தேடி வந்த நிலையில் நேற்று முன்னாள் தலைமை காவலர் ஹேமேந்திர குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹேமேந்திரகுமார் காவல் துறையில் தலைமைக்காவலராக பணியாற்றி வந்த போது ஐஎஃப்எஸ் நிறுவனத்தில் முகவராக சேர்ந்து 2 ஆயிரம் நபர்களிடம் இருந்து 550 கோடி வசூல் செய்து கொடுத்து, பலகோடி ரூபாய் கமிஷனாக பெற்றதும் தெரியவந்தது. மேலும் முகவர் தொழிலில் கோடிக்கணக்கில் கமிஷன் வருவதால் தலைமைக்காவலர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு முழுநேரம் வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் அவரிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ள போலீஸார் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE