`மதுவில் சயனைடு கலந்து சகோதரனை கொன்றேன்'- சொத்து பிரச்சினையால் அண்ணனே செய்த கொடூர சம்பவம்

By காமதேனு

மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில் டாஸ்மாக் மது குடித்த இருவர் மரணம் அடைந்த விவகாரத்தில், அவர்கள் குடித்த மதுவில் அண்ணனே சயனைடு கலந்ததைக் கண்டுபிடித்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா பெரம்பூர் காவல் சரகம் தத்தங்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிகுருநாதன்(50). இவர் மங்கைநல்லூர் மெயின்ரோட்டில் இரும்புப்பட்டறை நடத்திவந்தார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பூராசாமி(65) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 12-ம் தேதி மாலை பழனிகுருநாதன். பூராசாமி ஆகியோர் பட்டறையில் மயங்கிய நிலையில் கிடந்தார்கள்.

அவர்களை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர்கள் முன்பே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சந்தேக மரணமாக பெரம்பூர் போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். மயங்கிக்கிடந்த இடத்தில் அரசு டாஸ்மாக் மதுபாட்டில் ஒன்று திறக்கப்படாமலும் ஒரு காலிபாட்டிலும் கிடந்ததால் டாஸ்மாக் சரக்கு குடித்ததால் இரண்டு பேரும் இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தஞ்சை தடய அறிவியல் ஆய்வக அதிகாரிகள் டாஸ்மாக் மதுபாட்டிலை சோதனை செய்ததில் மதுபானத்தில் சயனைட் கலந்திருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அவர்களின் விசாரணையில் பழனிகுருநாதனுக்கும் அவரது சகோதரர்களுடன் (முதல் தாரத்து மகன்கள்) சொத்து பிரச்சினை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சகோதரர்கள் பாஸ்கரன், மனோகர் ஆகியோரை மயிலாடுதுறை காவல்நிலையம் அழைத்து சென்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பாஸ்கரன் திட்டமிட்டு இந்த கொலையை செய்தது உறுதியானது.

பழனி குருநாதனை கொலைசெய்ய திட்டமிட்டு மயிலாடுதுறையில் நகை தயாரிக்கும் தொழில் செய்துவரும் உறவினர் ஒருவரிடம் மரத்தை பட்டுப்போக செய்ய வேண்டும், அதற்காக சயனைடு வேண்டுமென்று கேட்டு வாங்கி வந்துள்ளார்.

டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி அதில் சயனைடு கலந்து பாட்டில் சீல் உடைக்காமல் இருப்பதுபோல் தெரிய வேண்டுமென்பதற்காக பெவிக்குவிக் போட்டு ஒட்டி கொல்லுபட்டறையில் யாருக்கும் தெரியாமல் சென்று அதனை வைத்ததாக பாஸ்கரன் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவத்தில் பாஸ்கரனுக்கு (52) மட்டுமே தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பெரம்பூர் போலீஸார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து பாஸ்கரனை கைது செய்து தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE