சிக்க வைத்த வைரல் வீடியோ; தேடிச்சென்று சப்-இன்ஸ்பெக்டருக்கு அபராதம்: ஹெல்மெட் அணியாததால் அதிரடி

By காமதேனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்ன, சின்ன சந்துகளில் நின்றுகொண்டு கூட காவல்துறையினர் ஹெல்மெட் சோதனை நடத்துகின்றனர். ஹெல்மெட் அணியாத பொதுமக்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சமூகவலைதளங்களில் எஸ்.ஐ ஒருவர் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டும் காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து அவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தலை கவசம் உயிர் கவசம் என அரசு தொடர்ந்து விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதை காவல்துறை மூலமே பரப்புரையும் செய்து வருகிறது. இந்தநிலையில் நாகர்கோவில், நேசமணிநகர் காவல் நிலைய எஸ்.ஐ முரளிதரன் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியானது. இது கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் கவனத்திற்கும் சென்றது.

இதனைத் தொடர்ந்து மோட்டார் வாகனச் சட்டப்படி அவருக்கு அபராதம் விதிக்க நாகர்கோவில் போக்குவரத்துக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு ஆய்வாளர் அருண், ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்ற எஸ்.ஐ முரளிதரனுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்தார்.

காணொலி பரவிய நிலையில் ஹெல்மெட் அணியாத காவலரைத் தேடிப்போய் 1000 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE