நாகர்கோவிலில் மதுபோதையில் பேருந்தை தாறுமாறாக ஓட்டிச் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து காட்டுப்புதூர் என்னும் கிராமத்திற்கு நேற்று இரவு கடைசி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதுதான் கடைசி பேருந்து என்பதால் பேருந்தில் அதிகளவு கூட்டம் இருந்தது. பேருந்தை மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பென்னட்(52) ஓட்டினார். இந்தநிலையில் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்து, அசம்புரோடு பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது தாறுமாறாக ஓடியது.
இதனால் அச்சம் அடைந்த பயணிகள் பேருந்திற்குள் இருந்தே கூச்சல் எழுப்பினர். இதனால் பயணிகள் சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தச் சொன்னார்கள். டிரைவர் பேருந்தை நிறுத்தியபோது அவர் மிதமிஞ்சிய போதையில் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இதுகுறித்து பயணிகள் வடசேரி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். போலீஸார் இதுகுறித்து நாகர்கோவில் பணிமனைக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அதிகாரிகள் சென்றும் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநர் பென்னட்டை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துப்போய் ஆல்கஹால் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதிலும் அவர் குடித்திருப்பது உறுதியாகவே ஓட்டுநர் பென்னட்டை இன்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்.