மரம் வெட்டிய போது தகராறு: தீயணைப்பு வீரருக்கு 10 ஆண்டுகள் சிறை

By காமதேனு

நாகர்கோவிலில் பொதுப்பாதையில் நின்ற மரத்தை வெட்டிய தீயணைப்பு வீரர், அதைத் தட்டிக்கேட்டவரை அரிவாளால் வெட்டினார். இதுதொடர்பான வழக்கில் தீயணைப்பு வீரருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

நாகர்கோவில் மேலப்பெருவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ஆண்டனி(44). கடந்த 2021-ம் ஆண்டு பிளசண்ட் நகர் பகுதியில் பொதுப் பாதையில் நின்ற முருங்கை மரத்தை தீயணைப்பு வீரர் ஆரோக்கிய செல்வன்(45) என்பவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொண்டு இருந்தார். இதை ஜோசப் ஆண்டனி தடுத்தார். நிழல் தரும் மரத்தை வெட்ட வேண்டிய அவசியம் என்ன எனவும் கேட்டு வாக்குவாதம் செய்தார்.

இதனால் கோபமான ஆரோக்கிய செல்வன், ஜோசப் ஆண்டனியை அரிவாளால் வெட்டினார். இதுதொடர்பாக வழக்கு நாகர்கோவிலில் உள்ள இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி அசன் முகமது அளித்தத் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட தீயணைப்பு வீரர் ஆரோக்கிய செல்வனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதில் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரருக்கு பத்து ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE