குடும்பத் தகராறில் பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் சேர்ந்து வாழ கணவர் அழைத்தார். ஆனால், வராத கோபத்தில் தன் தந்தையுடன் சேர்ந்து, மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் நேரு காலனி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன்(37). இவரது மனைவி அன்பு(32). இத்தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மகாராஜனுக்கும், அன்புவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அதே பகுதியில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்குக் குழந்தைகளோடு அன்பு போய்விட்டார்.
அவரைத் தொடர்ந்து சமரசம் செய்து சேர்ந்து வாழ மகாராஜன் அழைத்து வந்தார். ஆனால், அன்பு அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த மகாராஜன் மற்றும் அவரது தந்தை சுடலைமுத்து(66) இருவரும் அன்புவின் தந்தையின் வீட்டிற்குச் சென்று அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்த அன்புவை அக்கம்,பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அன்பு கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவர் மகாராஜன், மாமனார் சுலைமுத்து இருவரையும் தாளமுத்துநகர் போலீஸார் கைதுசெய்தனர். வாழ மறுத்த இளம்பெண்ணை தந்தையும், மகனும் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.