கார் விபத்து தொடர்பாக புகார் அளிக்க வந்தவரிடம் 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தலைமைக்காவலர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புனேயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் உள்ள ஏர்வாடா காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரிபவர் ராஜேந்திர தீட்சித். இவரிடம் டிராவல்ஸ் நடத்தி வரும் ஒருவர், தனது கார் விபத்தில் சிக்கியது தொடர்பாக புகார் அளிக்க வந்தார். அவரிடம் வழக்கைப் பதிவு செய்ய தலைமைக்காவலர் ராஜேந்திர தீட்சித் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். கடைசியில் 13 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என பேசி முடிக்கப்பட்டது.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத டிராவல் ஏஜென்ட், இதுதொடரபாக ஊழல் தடுப்பு பிரிவில் புகார் செய்தார். இதையடுத்து புனே ரேஞ்ச் காவல்துறை கண்காணிப்பாளர் அமோல் தம்பே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஏர்வாடா காவல் நிலையத்தில் 13 ஆயிரம் ரூபாயை லஞ்சம் வாங்கும் போது தலைமைக் காவலர் ராஜேந்திர தீட்சித் கையும், களவுமாக அந்தக்குழு பிடிபட்டது.
மேலும், இக்குற்றத்தில் தலைமைக்காவலருக்கு உடந்தையாக இருந்த ஜெய்ராம் சாவல்கர் மற்றும் விநாயக் முதோல்கர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், 1064 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அமோல் தம்பே வேண்டுகோள் விடுத்துள்ளார். லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக தலைமைக்காவலர் பிடிபட்ட சம்பவம் புனேயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.