திருமணம் முடிந்த 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலி: கதறிய கர்ப்பிணி மனைவி

By காமதேனு

திருமணம் முடிந்து நான்கே மாதங்களில் நெல்லையில் புதுமாப்பிள்ளை உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தெரியவந்ததும் அவரது கர்ப்பிணி மனைவி கதறி அழுத சம்பவம் பார்ப்போரையும் உருக வைத்தது.

திருநெல்வேலி டவுண், கருப்பந்துறை பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி நம்பிராஜன்(29) சொந்தமாக லோடு ஆட்டோ வைத்துத் தொழில் செய்து வருகிறார். நேற்று மாலையில் நம்பிராஜன் சீவலப்பேரி சாலையில் சென்று கொண்டு இருந்தார். அங்குள்ள மணிக்கூண்டு பகுதியில் சென்று கொண்டு இருக்கும்போது செங்கல் ஏற்றிவந்த லாரி ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நம்பிராஜன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த நம்பிராஜன் சிகிச்சைப் பலன் இன்றி இன்று பரிதாபமாக உயிர் இழந்தார். நம்பிராஜனுக்கு திருமணம் முடிந்து நான்கு மாதங்களே ஆகின்றது. அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்தநிலையில் புதுமாப்பிள்ளை விபத்தில் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE