வழிப்பறியைத் தடுத்த பி.டெக் மாணவி பலி... குற்றவாளியை என்கவுன்டர் செய்த போலீஸ்!

By காமதேனு

ஆட்டோவில் சென்ற கல்லூரி மாணவியிடம் அவரது செல்போனை டூவீலரில் வந்த இருவர் பறிக்க முயன்றனர். இதில் கீழே விழுந்த கல்லூரி மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி ஒருவரை போலீஸார் இன்று சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த கீர்த்தி சிங்

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி சிங்.(19). இவர் ஏபிஇஎஸ் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். இவர் வெள்ளிக்கிழமையன்று தனது தோழி திஷா ஜிண்டலுடன் ஹாபூருக்கு கீர்த்தி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

என்கவுன்டர் செய்யப்பட்ட ஜிதேந்திரா

அப்போது டூவீலரில் வந்த இரண்டு வாலிபர்கள், கீர்த்தி சிங் கையில் இருந்த செல்போனை பறித்துள்ளனர். அப்போது அதை தடுக்க கீர்த்தி சிங் , வழிப்பறி கொள்ளையர்களிடமிருந்து போராடினார். அப்போது, ஆட்டோவில் இருந்து கீர்த்தி சிங் கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் காஜியாபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி கீர்த்தி சிங் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கீர்த்தியிடம் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது காஜியாபாத்தின் மசூரியில் உள்ள மிஷால் கர்ஹி பகுதியைச் சேர்ந்த பிரபல வழிப்பறிக் கொள்ளையன் ஜிதேந்திரா என்பது தெரிய வந்தது. அவர் மீது 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அவருடன் கூட்டாளியான பல்பீர் என்பவரும் சேர்ந்து இந்த செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை, டூவீலரில் ஜிதேந்திராவும், பல்பீரும் வந்து கொண்டிருந்தனர்.

துப்பாக்கிச்சூடு

அவர்களை கங்கை நதி சாலையில் போலீஸார் வாகனச்சோதனையின் போது தடுத்து நிறுத்தினர். ஆனால், டூவீலரை நிறுத்தாமல் பல்பீர் ஜிதேந்திராவுடன் தப்பிச் சென்றார். இதனால் சினிமா பாணியில் அவர்களை போலீஸார் ஜீப்பில் துரத்தினர். இதனால் வழிப்பறி கொள்ளையர்கள் இருவரும், போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதற்கு போலீஸார் பதிலடியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஜிதேந்திரா காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதனால் டூவீலரில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். அங்கிருந்து பல்பீர் தப்பியோடி விட்டார். படுகாயத்துடன் யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிதேந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை கைது செய்பவருக்கு 25,000 ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செல்போன் பறிப்பில் கல்லூரி மாணவி பலியான நிலையில், அதற்குக் காரணமான வழிப்பறி கொள்ளையன் என்கவுன்டரில் கொல்லப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!

அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!

110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!

1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!

படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE