சாலைவசதி இல்லாததால் உடல்நிலை சரியில்லாத முதியவரை மலைக்கிராம மக்கள் தூளி கட்டி தூக்கி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்காட்டில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொடிக்காடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசித்து வரும் அண்ணாமலை என்பவர், முதுமை காரணமாக நோய்வாய் பட்டதால் அவரை மருத்துமணைக்கு கொண்டு செல்ல ஊர் மக்கள் தூளி கட்டி எடுத்து வந்தனர். இதை வீடியோவாக எடுத்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், அந்த மலைக்கிராமத்தின் அவல நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
பல வருடமாக இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாமல், அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிராமத்திற்க்கு செல்லும் மலைப்பாதையையும் தனியார் எஸ்டேட் உரிமையாளர் ஒருவர் அது தனக்கு சொந்தமான நிலம் என கூறி வேலி அமைத்ததாக தெரிகிறது. இதனால், கடுமையான பாதிப்படைந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என்றும் கூறினர்.
இதையடுத்து, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய அதிகாரிகள் இப்பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறியுள்ளனர். ஆனால், தேர்தல் முடிந்து இரண்டரை ஆண்டு காலம் முடிந்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக பல முறை ஏற்காடு தாசில்தார், சேலம் மாவட்டம் ஆட்சித்தலைவர் ஆகியோரிடம் முறையிட்டும் பலனில்லை என்று அந்த கிராம மக்கள் வேதனை தெரிவிகின்றனர்.