கேரளாவில் வழிபாட்டு கூட்டத்தில் குண்டு வெடிப்பு... ஒருவர் பலி; 29 பேர் படுகாயம்!

By காமதேனு

கேரளாவின் களமசேரியில் இன்று நடைபெற்ற பிரார்த்தனை கூடத்தில் நடந்த பயங்கர வெடி விபத்தில் ஒருவர் பலியானார். 29 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

எர்னாகுளம் களமசேரியில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூடத்தில் 3 நாட்கள் தொடர் பிரார்த்தனைக்காக பெரும் எண்ணிக்கையிலானோர் கூடியிருந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வந்த நிலையில், காலை திடீரென பயங்கர வெடி சத்தம் அடுத்தடுத்து கேட்டது. 6 முறை இந்த தொடர் வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர வெடி சத்தத்தால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். இந்த திடீர் வெடி விபத்தால் பயங்கர தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த வெடி விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 29 பேர் படுகாயங்களுடன் எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 5 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் கொச்சி பிரார்த்தனை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

கேரளா வெடிவிபத்து

இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. வெடிகுண்டுகள் வெடித்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததா? அல்லது வேறு காரணத்தால் வெடி விபத்து ஏற்பட்டதா? என்பது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடி விபத்தை தொடர்ந்த்து அரசு மருத்துவர்கள் உடனே பணிக்கு திரும்ப சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வெடி விபத்து நிகழ்ந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போலீஸ் உயர் அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருவதாக அமைச்சர் பி ராஜீவ் தெரிவித்துள்ளார்.

இந்த பிரார்த்தனை கூட்டத்தில் சுமார் 2000 பேர் கூடியிருந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூன்றாவது நாளாக இந்த பிரார்த்தனை கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்த அசம்பாவித சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE