வாங்கிய கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி...தனியார் வங்கி நெருக்கடியால் வாலிபர் தற்கொலை!

By காமதேனு

கேரளாவில் ரூ.8 லட்சம் வீட்டுக்கடனுக்கு ரூ.8.70 லட்சம் கட்டியும், வட்டி என்ற பெயரால் மேலும் ரூ.6 லட்சம் கேட்டு தனியார் வங்கி வீட்டை காலி செய்யுமாறு நெருக்கடி கொடுத்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், திருச்சூர் அருகே உள்ள கஞ்சாணி என்ற பகுதியைச் சேர்ந்தவர் வினயன். இவரது 26 வயது மகன் விஷ்ணு என்பவர், வீட்டின் அருகிலேயே வெல்டிங் ஒர்க் ஷாப் ஒன்றை தனியாக நடத்தி வந்தார்.

கடந்த 2010-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் இருந்து வினயன் 8 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக பெற்றுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு வரை பல்வேறு தருணங்களில் 8 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாயை அவர் வங்கிக்கு திரும்பச் செலுத்தியுள்ளார்.

ஆனால் 2016-ம் ஆண்டிற்குப் பிறகு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அவர் பணத்தை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து வந்த கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக வங்கி கடனை கட்ட முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் தனியார் வங்கி தரப்பில் வட்டிக்கு மேல் வட்டி போட்டு சுமார் 6 லட்சம் ரூபாய் பணத்தை கட்ட வேண்டும் என நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இறுதியாக ஒரு வார காலத்திற்குள் பணத்தைச் செலுத்தாவிட்டால், வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என வங்கி அதிகாரிகள் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

திருச்சூர் போலீஸார் விசாரணை

நேற்று முன்தினம் வங்கிக்குச் சென்றிருந்த வினயன், பணத்தைத் திருப்பிச் செலுத்துவதாகவும் இல்லையென்றால் வீட்டைக் காலி செய்து கொடுப்பதாகவும் கூறிவிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டிலிருந்த பொருட்களை வெளியே எடுத்து வைக்கும் பணியில் வீட்டிலிருந்தவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களுக்கு உதவியாக வேலை செய்து கொண்டிருந்த விஷ்ணு, கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென வீட்டிற்குள் சென்ற விஷ்ணு, அறை ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கி தரப்பில் அளிக்கப்பட்ட நெருக்கடியே விஷ்ணுவின் உயிரிழப்பிற்கு காரணம் என அவரது பெற்றோரும், உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், வங்கி தரப்பில் போதுமான அளவு அவகாசம் அளிக்கப்பட்டதாகவும், இருந்த போதும் அவர்கள் பணத்தைத் திரும்ப செலுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பிப்.12-ம் தேதி பட்ஜெட் கூட்டம்... ஆளுநர் ரவிக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!

நடிகர் விஜய் தொடங்கிய கட்சியால் திமுகவுக்குப் பாதிப்பா?: கனிமொழி எம்.பி பேட்டி

பகீர்... காவல் நிலையத்தில் பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு: சிவசேனா தலைவர் கவலைக்கிடம்!

குரூப் 2-வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு... நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு!

1,000 ரூபாய் அனுப்பினால் ஆபாச போட்டோ அனுப்புகிறேன்: பெண்ணை நம்பி பணத்தை இழந்த நடிகர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE