பகீர்... காவல் நிலையத்தில் பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு: சிவசேனா தலைவர் கவலைக்கிடம்!

By காமதேனு

காவல் நிலையத்தில் சிவசேனா தலைவர் மீது பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணேஷ் கெய்க்வாட், மகேஷ் கெய்க்வாட்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகில் உள்ள உல்லாஸ்நகரில் நேற்று இரவு நிலப்பிரச்சினை தொடர்பாக பேச சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே) எம்எல்ஏ ராகுல் பாட்டீல் மற்றும் மாவட்ட சிவசேனா தலைவர் மகேஷ் கெய்க்வாட் ஆகியோர் உள்ளூர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்திருந்தனர்.

அங்கு பாஜக எம்எல்ஏ கணேஷ் கெய்க்வாட்டும் தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார். இதனால் போலீஸ் நிலையத்திற்கு வெளியில் இரண்டு கோஷ்டியினரும் குவிந்திருந்தனர்.

துப்பாக்கிச்சூடு

அப்போது எம்எல்ஏக்கள் மற்றும் மகேஷ் கெய்க்வாட் ஆகியோர் காவல் ஆய்வாளர் அறைக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நில விவகாரத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கணேஷ் கெய்க்வாட் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சிவசேனா தலைவர்கள் மீது சரமாரியாக சுட்டார். சிவனோ தலைவர் மகேஷ் கெய்க்வாட் மீது நான்கு தோட்டாக்களும், ராகுல் பாட்டீல் மீது இரண்டு தோட்டாக்களும் பாய்ந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கணேஷ் கெய்க்வாட்டிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கிய போலீஸார் அவரையும், அவரது பாதுகாவலரையும் கைது செய்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த இரண்டு பேரும் தானே ஜூபிடர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மகேஷ் கெய்க்வாட் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனைக்கு வெளியே திரண்டுள்ள சிவசேனா தொண்டர்களால் பரபரப்பு நிலவி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE