மடத்துக்குளம் அருகே சிறுமி கர்ப்பம்: கோயில் பூசாரிக்கு 20 ஆண்டு சிறை விதித்த நீதிமன்றம்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: மடத்துக்குளம் அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கோயில் பூசாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமத்தை சேர்ந்தவர் ஐயப்பன் (57). கோயில் பூசாரி. கடந்த 2021-ம் ஆண்டு 14 வயது சிறுமி கோயிலுக்கு சென்றபோது ஏற்பட்ட பழக்கத்தில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து ஐயப்பனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று (ஆக. 19) தீர்ப்பு அளிக்கப்பட்டது.

சிறுமியை ஏமாற்றி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், கர்ப்பமாக்கிய குற்றத்துக்கு 20 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை பிரிவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், கொலை மிரட்டல் பிரிவுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, இதை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜமீலாபானு ஆஜரானார். இதையடுத்து ஐயப்பன் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE