திருவள்ளூர்: ஆவடி அருகே அயப்பாக்கம் பகுதியில் மின் இணைப்பு வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் , கடந்த 2014-ம் ஆண்டு தன் வீட்டின் முதல் தளத்துக்கு புதிய மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் விண்ணப்பித்தார். மின் இணைப்பு வழங்க, அப்போது அயப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக பணிபுரிந்த சுகுமார் (52) ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து, ஜெயக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், சுகுமாரை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர் . தொடர்ந்து, அவர்களின் ஆலோசனையின் படி, கடந்த 2014- ம் ஆண்டு உதவி மின் பொறியாளர் சுகுமாரிடம் ரசாயண பவுடர் தடவப்பட்ட ரூ. 2 ஆயிரத்தை ஜெயக்குமார் லஞ்சமாக அளித்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுகுமாரை கைது செய்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையில், சுகுமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதனையடுத்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே. மோகன் இன்று பிறப்பித்த தீர்ப்பில், உதவி மின் பொறியாளர் சுகுமாருக்கு, 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார்.
» திமுக - பாஜக: ஸ்டாலின் Vs இபிஎஸ் முதல் பர்கூர் வன்கொடுமை வரை: டாப் 10 விரைவுச் செய்திகள்
» சிவகங்கை அருகே உப்பாற்றில் 300 இறந்த கோழிகளை வீசி சென்ற மர்ம நபர்கள்!