சென்னையில் அலுவலகத்திற்குள் புகுந்து திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாமூல் கேட்டு கொடுக்காததால் ரவுடி கும்பல் இந்த வெறிச்செயலை நடத்தியுள்ளதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை எண்ணூர் பூம்புகார் நகர் சக்திபுரம் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் திமுகவில் பகுதி பிரதிநிதியாக பதவி வகித்து வருகிறார். தொழிலதிபரான விவேகானந்தன் சொந்தமாக ஆர்.வி. இன்ஜினீயரிங் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் காமராஜ் (35) கட்டுமான நிறுவனத்தை நிர்வகித்து வந்துள்ளார். காமராஜும் திமுகவில் இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்து வந்ததாக தெரிகிறது. காமராஜுக்கு திருமணமாகி யாமினி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக ரவுடி கும்பல் ஒன்று காமராஜிடம் ஒரு பெரும் தொகையை மாமூலாக கேட்டு மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இன்று காலை 9.30 மணியளவில் காமராஜ் வழக்கம் போல் விம்கோ நகரில் உள்ள தனது கட்டுமான அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு தனது ஊழியர்களுடன் காமராஜ் பேசிக்கொண்டிருந்த போது திடீரென அலுவலகத்திற்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று காமராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது. இதில் காமராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமராஜ் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த எண்ணூர் போலீஸார், காமராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து போலீஸார் இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ரவுடி கும்பல் ஒன்று காமராஜிடம் மாமூல் கேட்டு மிரட்டி வந்ததும் அவர் மாமூலை தர மறுத்ததால் அந்த கும்பல் செல்போனில் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
இன்று காலை காமராஜ் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு வரும் போது அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் பின்னர் அலுவலகத்திற்குள் புகுந்து காமராஜை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீஸார் 4 தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளில் பதிவு அடையாளங்களை வைத்து தப்பி ஓடிய கொலையாளிகளை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் அலுவலகத்தில் புகுந்து திமுக பிரமுகரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு; கேரளத்தில் மீண்டும் பரபரப்பு!
அதிர்ச்சி... தூக்கில் தொங்கிய 10 ம் வகுப்பு மாணவி! மர்ம மரணமாக போலீஸார் விசாரணை!
பெரும் சோகம்... டேங்கர் லாரியை மறைத்த பனிமூட்டம்... விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!
தொடர் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலியான பரிதாபம், 50 பேர் காயம்