சத்தீஸ்கர்: தனது மகள்கள் பொம்மைக்காக சண்டையிட்டு கொண்டதால், ஆத்திரமடைந்த தந்தை ஒருவர் 8 வயது மகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சத்தீஸ்கரின் ஜான்ஜ்கிர்-சம்பா பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் சல்மான் அலி (35) என்பவரின் மகள்கள் அலிஷா பர்வீன் (8) மற்றும் அலினா பர்வீன் (9). இவர்கள் இருவரும் பொம்மைக்காக சண்டை போட்டுக்கொள்வதை பார்த்து கோபமடைந்தார் சல்மான் அலி. மகள்களின் சண்டையால் ஆத்திரமடைந்த சல்மான் அலி, அவர்களை பெல்ட்டால் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் சிறுமிகளை உதைத்து, மிதித்து துன்புறுத்தியுள்ளார்.
சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமிகளை மீட்டனர். இதில் பலத்த காயமடைந்த சிறுமிகள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எட்டு வயது அலிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மூத்த சகோதரி அலினா ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.
இச்சம்பவம் குறித்து மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் போலீஸில் புகார் செய்தனர். மருத்துவமனைக்கு வந்த போலீஸார், அலிஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
» கலவரத்தின் போது மீன் வியாபாரி கொலை: வங்கதேச முன்னாள் பிரதமர் மீது புதிய கொலை வழக்குப்பதிவு
» புதிய தலைமைச்செயலராக முருகானந்தம் பொறுப்பேற்றார் | கடந்து வந்த பாதை
இதனையடுத்து சல்மானை கைது செய்த போலீஸார் அவரை விசாரித்து வருகின்றனர். இதுகுறித்துப் பேசிய ஜான்ஜ்கிர்-சம்பா சப்-டிவிசனல் போலீஸ் அதிகாரி யாத்மணி சிதர், “சல்மான் ஒரு கொந்தளிப்பான நபர் என்று தெரியவந்துள்ளது. அடிக்கடி சண்டைபோட்டதால் சல்மானின் மனைவி அவரை விட்டு பிரிந்திருந்தார். இதனையடுத்து சல்மான் தனது இரண்டு மகள்களையும் வீட்டில் அடைத்து வைத்திருந்தார். அவர்களின் தாயார் எப்போதாவது மகள்களை வந்து சந்திப்பார்” என்று தெரிவித்துள்ளார்