என் சாவுக்கு இவர்கள் தான் காரணம்... வாட்ஸ் அப் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்!

By காமதேனு

பணிச்சுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் அலுவலகத்தின் உள்ளே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம் கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் ராகுல்(27). பட்டதாரியான இவர், விநாயகபுரம் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாகக் கிளை மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 29-ம் தேதி இரவு தன் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் ஆடியோ ஒன்றை அனுப்பிவிட்டு ராகுல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த ஆடியோவைக் கேட்ட நண்பர்கள், பதறியடித்துக் கொண்டு, பார்சல் நிறுவன அலுவலகத்திற்கு ஓடிச் சென்றனர்.

அங்கு ராகுல் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக அவரை மீட்ட நண்பர்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆத்தூர் அரசு மருத்துவமனை

அங்கு ராகுலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக ஆத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து உடனடியாக விரைந்து சென்ற போலீஸார், ராகுலின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ராகுலின் நண்பர்களிடம் இருந்த ஆடியோவையும் பெற்று ஆய்வு செய்தனர். அந்த ஆடியோவில், தன் இறப்பிற்கான காரணம் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவா, நாமக்கல்லைச் சேர்ந்த சதீஷ் மற்றும் பெர்சியா எனக் குறிப்பிட்டிருந்தார். வேலையில் கூடுதல் அழுத்தம் கொடுத்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாலேயே இந்த முடிவுக்கு வந்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஆத்தூர் காவல் நிலையம்

மேலும், தனது பெற்றோரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும் என தன் நண்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, ஆத்தூர் போலீஸார், குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினர். மேலும், ராகுல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அலுவலகத்தில் போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், அவர் தூக்கு மாட்டிய சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டது.

இவற்றின் அடிப்படையில் தற்கொலை தூண்டுதல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, ராகுல் பேசிய ஆடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

தினமும் 12 மணி நேர வேலை... வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு?

ஐஐடி கல்வி நிறுவனத்திற்கு ரூ.110 கோடி நன்கொடை... அள்ளித் தந்த முன்னாள் மாணவரான பிரபல தொழிலதிபர்!

முதுகலை பல் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!

வீடு புகுந்து மனைவி, காதலன் வெட்டிக் கொலை: முன்னாள் கணவர் வெறிச்செயல்!

பரபரப்பு...வாகனம் ஏற்றி விவசாய சங்க தலைவர் கொலை?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE