கர்நாடக விவசாய சங்க தலைவர் வாகனம் மோதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
கர்நாடகா மாநிலம், விஜயநகர் மாவட்டம் ஹோஸ்பேட்டையில் வசித்தவர் ஜெ. கார்த்திக். விவசாய சங்க நிர்வாகியான இவர் முதலில் கொடிஹள்ளி சந்திரசேகர பனா ரைதா சங்கத்தில் இவர் இருந்து செயல்பட்டார். இதன் பின் அதில் இருந்து விலகி தனியாக ஒரு சங்கத்தை உருவாக்கினார். கர்நாடக மாநில விவசாயிகள் சங்க பசுமைப்படை என்ற பெயரில் கார்த்திக் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், புடகும்பா கிராஸ் அருகே நெடுஞ்சாலையில் விவசாய சங்க தலைவர் கார்த்திக்கின் டூவீலர் நேற்று கிடந்தது. அங்கு கார்த்திக் படுகாயம் அடைந்த நிலையில் கிடந்தார். அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்தோடியது.
அப்போது அவ்வழியாக சென்றவர்கள், சாலையில் கிடந்த கார்த்திக்கை மீட்டு ஹூப்ளியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.30 மணியளவில் கார்த்திக் காலமானார்.
பல போராட்டங்களை முன்னின்று நடத்திய கார்த்திக்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், காவல் துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பசுமைப்படை விவசாய சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கார்த்திக் வாகனம் மோதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸாரும் சந்தேக்கின்றனர். கொப்பல் மாவட்டம் முனிராபாத் காவல் நிலையத்திற்குட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். விவசாய சங்க தலைவர் மர்மமான முறையில் இறந்திருப்பது விஜயநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.