ஈரோடு: ஈரோடு மாவட்டம் தேவம்பாளையத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். டிராவல்ஸ் தொழிலில் அனுபவம் உள்ள இவர், வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, அவர்கள் நாட்டுப் பணத்துக்கு மாற்றாக, இந்திய ரூபாய்களை மாற்றித் தரும் பணியை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக இணையதளங்களில் விளம்பரமும் செய்துள்ளார்.
இந்நிலையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு என்பவர் அசோக்குமாரை அணுகி,தான் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி ஜவுளித் தொழில் செய்து வருவதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக 500 அமெரிக்க டாலருக்கு மாற்றாக, இந்திய ரூபாய்களை வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
தொடர்ந்து, ஈரோடு வந்த நைஜீரிய நபர், அசோக்குமாரிடம் 500 அமெரிக்க டாலரைக் கொடுத்துவிட்டு, அதற்கு மாற்றாக இந்தியமதிப்பில் ரூ.48 ஆயிரம் பெற்றுள்ளார். நைஜீரிய நபர் கொடுத்த டாலர் நோட்டுகளை அசோக்குமார் ஆய்வு செய்த போது, அவை போலி என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஈரோடு எஸ்.பி. ஜவகரிடம், அசோக்குமார் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வுவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் போலி டாலர்கள் கொடுத்து மோசடி செய்தது உறுதியானது.
மேலும், கோவை காட்டூர் பகுதியில், இதேபோல போலி கரன்ஸிகொடுத்து மோசடி செய்தது தொடர்பாக அவர் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, நாதன் இகேச்சுக்வை ஈரோடு போலீஸார் கைது செய்தனர்.