நண்பனைக் கொலை செய்து அவனது உடலைக் காட்டில் வீசிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அமேதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள மொஹபத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரியாக்ஸ். இவரது மகன் மெராஜ்(15) நேற்று முன்தினம் ஒரு திருமணத்திற்குச் செல்வதாக வீட்டை விட்டுச் சென்றார். இதன் பின் அவர் காணவில்லை. அவனை பல இடங்களில் அவரது குடும்பத்தினர் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து மெராஜின் தந்தை காவல் துறையில் புகார் கூறினார். அதில், தனது மகனுடன் அவரது நண்பர்களான தினேஷ் ராம்(15, பெயர் மாற்றப்பட்டுள்ளது), சுதாகர்(15, பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் உடன் சென்றதாக ரியாக்ஸ் கூறியிருந்தார்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் நேற்று பிடித்து விசாரித்தனர். ஆனால், திருமணத்திற்கு வந்த மெராஜை அதன் பின் தாங்கள் பார்க்கவில்லை என்று இருவரும் கூறினர்.
இந்த நிலையில், ஜெகதீஷ்பூர் நகரில் உள்ள காட்டில் மெராஜ் உடல் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், உடலை மீட்டு விசாரணை நடத்திய போது, மெராஜ் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு அவனது உடல், காட்டில் வீசப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதனால் தினேஷ் ராம், சுதாகரிடம் ஜெகதீஷ்பூர் போலீஸார் அவர்களது பாணியில் விசாரணை நடத்திய போது, மெராஜை கத்தியால் குத்திக்கொலை செய்து உடலைக் காட்டில் போட்டது தாங்கள் தான் என்று வாக்குமூலம் அளித்தனர்.
அவர்களை கைது செய்த போலீஸார், எதற்காக மெராஜை அவர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்தனர் என விசாரித்து வருகின்றனர். 2 சிறுவர்களால் அவரது நண்பன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமேதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!
உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்
ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு