பெரம்பலூர்: வேப்பந்தட்டை ஒன்றிய திமுக பெண் நிர்வாகி உள்பட 2 பேர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய திமுக துணை செயலாளராக இருப்பவர் பிம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்மனைவி வனிதா ( 43). இவரும், வேப்பந்தட்டை வட்டம், திருவாளந்துறை கிராமத்தைச் சேர்ந்த பழனிமுத்து மகன் திமுக உறுப்பினர் மோகன் (28) ஆகியோரும் சேர்ந்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குன்னம் வட்டம், நன்னை கிராமத்தைச் சேர்ந்த வீ.செல்வ வினோத் (34) என்பவரிடம் ரூ.1.4 லட்சம், குன்னம் மாவட்டம், கோவில்பாளையம், அண்ணா நகரைச் சேர்ந்த ராஜேஷ் மனைவி இலக்கியா (27) என்பவரிடமிருந்து ரூ.2.7 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து வற்புறுத்தவே செல்வவினோத்துக்கு ரூ.80 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்து விட்டு, மீதித்தொகை ரூ.60 ஆயிரத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதேபோல் இலக்கியாவிடம் ரூ.2.45 லட்சத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு மீதி ரூ 25 ஆயிரத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதுகுறித்து செல்வ வினோத், இலக்கியா ஆகிய இருவரும் அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீஸார் நேற்று வனிதா, மோகன் ஆகிய இருவர் மீதும் மோசடி வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.
» சென்னையில் இன்று கல்விக் கடன் சிறப்பு முகாம்
» ரூ.5.2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் - சென்னையை சேர்ந்த 6 பேர் பெங்களூரில் கைது