திருச்சியில் ஜப்திக்கு சென்ற துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக திமுக மாமன்ற உறுப்பினர் விஜய் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காஜாமலை பகுதியில் ஏசிஎல் என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் நடத்தி வந்துள்ளனர். அவர்கள் கடந்த 2012 ம் ஆண்டு காஜாமலையில் உள்ள சொத்தினை அடமானம் வைத்து கனரா வங்கியில் கடன் வாங்கி உள்ளனர். ஆனால் அதற்கான அசல் மற்றும் வட்டியை அவர்கள் செலுத்தாமல் இருந்துள்ளனர்.
பலமுறை வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பியும் கடன் தொகையை திரும்ப செலுத்தாததால் காஜாமலை பகுதியில் உள்ள கார்த்திக் வீட்டிற்கு நேற்று முன்தினம் மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார் மற்றும் கனரா வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்ய சென்றுள்ளனர். ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த கார்த்திக் மற்றும் அடையாளம் தெரியாத 20க்கும் மேற்பட்ட குண்டர்கள் சரமாரியாக அவர்களை தாக்கி உள்ளனர்.
மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த மண்டல துணை வட்டாட்சியர் பிரேம் குமார் மற்றும் கனரா வங்கி ஊழியர்கள் படுகாயத்துடன் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து திருச்சி மேற்கு வட்டாட்சியர் ராஜவேல் மற்றும் கனரா வங்கி மேலாளர் ஆகியோர் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் துணை வட்டாட்சியரைத் தாக்கிய விவகாரத்தில் திமுக மாமன்ற உறுப்பினர் விஜய் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.