குண்டர் சட்டத்தை பதிவு செய்வதில் தெளிவு இருக்க வேண்டும்: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

By KU BUREAU

சென்னை: தனி நபர் சார்ந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதை அனுமதிக்க முடியாது. குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக செல்வராஜ் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது. இதனை எதிர்த்து செல்வராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குண்டர்சட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல் துறை தரப்பில், மனுதாரரின் உதவியுடன் போலி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டதோடு, போலி ஊதியச் சான்று தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் வங்கியில் கடன் பெறப்பட்டு,ரூ.3.30 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இது அனைத்துமே மனுதாரரின் உதவியுடன் நடைபெற்றதாலேயே குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இவை அனைத்தும் தனி நபர் சார்ந்த குற்றங்கள் எனவும் காவல்துறை விசாரணை நடத்தி அந்த பணத்தை மீட்கலாம் எனக்கூறி, செல்வராஜ்
மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், “ யார் குண்டர்கள் என்பதை தமிழக அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். யார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். குண்டர் சட்டத்தை தேவை இல்லாமல் சாதாரணமாக பயன்படுத்த கூடாது. சட்டவிரோதமாக ஒருநாள் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டாலும் அது சட்ட விரோதம்” என காவல்துறை தரப்பிற்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE