மதுரை: மதுரையில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருபவரிடம் ரூ. 2 லட்சம் கடனுக்கு ரூ.2 கோடி வரை கந்துவட்டி வசூலித்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த இளங்கோ, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு கரோனா தொற்று காலத்தில் தொழில் முடங்கியதால் தனி நபர்களிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்றேன். இதற்காக ஆவணங்களை கொடுத்தேன். முதலில் 10 சதவீத வட்டி கேட்டனர். முறையாக வட்டியைச் செலுத்தி வந்தேன்.
பின்னர் கூடுதல்வட்டி கேட்டு மிரட்டினர். இதுவரை ரூ.2 கோடி வரை கொடுத்துள்ளேன். வட்டிக்காக எனது மோட்டார் சைக்கிள், காரை பறிமுதல் செய்தனர். எனது நிறுவனத்தை எழுதித் தர வேண்டும், தராவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினர். இது தொடர்பாக தல்லாகுளம் காவல் ஆய்வாளர், டிஎஸ்பியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பின்னர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கில் என் புகாரின் பேரில் வழக்குப் பதிய உத்தரவிடப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் இப்போது வரை வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே நீதித்துறை நடுவர் உத்தரவின்பேரில் கந்துவட்டிக் கும்பல் மீது வழக்குப் பதிய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
» பட்டம் விடும் திருவிழாவின் 2-ம் நாளில் பல்வேறு உருவங்களில் ராட்சத பட்டங்கள்
» கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் அதிமுக பங்கேற்காது: ஜெயக்குமார்
இந்த மனுவை நீதிபதி டி.புகழேந்தி விசாரித்தார். முன்பு விசாரணைக்கு வந்தது. மதுரை மாநகர் காவல் ஆணையர் தரப்பில் வாதிடுகையில், மனுதாரர் புகார் உரிமையியல் பிரச்சினை தொடர்பானது என்பதால், மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் மனுதாரர் புகாரின் மீது 27.7.2024-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
பின்னர் நீதிபதி, போலீஸார் புகார் மனுக்களைப் பெற்றதும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துவதற்கு பல உதாரணங்கள் உள்ளன. தென்மாவட்டங்களில் கந்து வட்டிப் பிரச்சினையால் ஏராளமானோர் இறந்துள்ளனர். இதனால் இப்புகார்கள் மீதுபோலீஸ் உயர் அதிகாரிகள்கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் வழக்கில் டிஜிபி எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர்கந்து வட்டி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.