அதிர்ச்சி... காதல் திருமணம் செய்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் உயிரிழப்பு!

By காமதேனு

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள், 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன். இவரது மகன் சசிமோகன்(32), மருத்துவக் கல்லுாரியில் படித்த போது, உடன் படித்த பூர்ணிமா(30), என்பவரைக் காதலித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கடந்த, 17-ம் தேதி வீட்டில் மருமகள் பூர்ணிமா, விளக்கு பற்ற வைத்தபோது அவர் அணிந்திருந்த உடையில் தீப்பிடித்தது. இதில், 80 சதவீதம் காயமடைந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின், வேலுார் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கவலைக்கிடமான நிலையில் பூர்ணிமா சிகிச்சை பெற்று வந்தார்.

பூர்ணிமா

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட முன்னாள் அமைச்சரின் மருமகள் திடீரென மரணமடைந்தது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE