பிரபல தொலைக்காட்சி செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

By காமதேனு

திருப்பூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை மர்மக்கும்பல் சரமாரியாக வெட்டியதில் அவர் கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நேசபிரபு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகாவைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணிபுரிந்து வருபவர் நேசபிரபு. நேற்று இரவு இவர் வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இதனால் அவர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்தத போது மறைந்திருந்த மர்மக்கும்பல், அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியுள்ளனர்.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நேசபிரபுவை, காமநாயக்கன்பாளையம் போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மர்ம நபர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

தனது உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சம்பவ நடைபெறுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து நேசபிரபு, போலீஸார் ஒருவரிடம் பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில், தன்னை சிலர் நோட்டமிடுவதாகவும், தான் எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து வருவதாகவும், தன்னைப் பற்றி அந்த மர்மநபர்கள் விசாரித்ததாகவும் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போதே அந்த நபர்கள் தன்னைச் சுற்றி வளைத்து விட்டதாகவும், தனது வாழ்க்கையே முடிந்து விட்டதாகவும் நேசபிரபு கூறி கதறியுள்ளார்.

இந்த சம்பவம் நடப்பதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே செய்தியாளர் நேசபிரபு போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில், அவர்கள் மெத்தனப்போக்குடன் செயல்பட்டதால் இந்த தாக்குதல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE