இந்தியாவின் 11 மாநிலங்களின் 76 இடங்களை குறிவைத்து ’ஆபரேஷன் சக்ரா-2’ என்ற பெயரிலான சைபர் கிரைம் வேட்டையை சிபிஐ இன்று மேற்கொண்டது.
நிஜ உலகின் குற்றங்களுக்கு இணையாக, இணையவெளியிலும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவை நிஜ உலக குற்றங்களைவிட அடையாளம் காண்பதிலும், சட்ட நடவடிக்கைகளை பாய்ச்சுவதிலும் சவாலாகி வருகின்றன. எனவே, சர்வதேச அளவில் பரந்து விரிந்திருக்கும் சைபர் குற்ற நெட்வொர்க்கை மடக்க, சர்வதேச அளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த வகையில் சர்வதேச காவல்துறையான இன்டர்போல், அமெரிக்காவின் உளவு அமைப்பான எஃப்பிஐ மற்றும் இங்கிலாந்து, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளின் உளவுத்துறைகளின் உதவியுடன் இந்தியாவின் சிபிஐ மிகப்பெரும் இணைய மோசடி முதலைகளைத் தேடி இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இன்று வேட்டை நடத்தியது.
ஆபரேஷன் சக்ரா வரிசை என்பது வழக்கமாக இணையவெளி குற்றங்களை குறிவைத்து சிபிஐ மேற்கொள்ளும் வேட்டையாகும். இதற்கு முன்னதாக, கால்சென்டர் வாயிலாக சர்வதேசளவில் பணம் பறித்த கும்பல்கள், இணையத்தில் சிறார் ஆபாசப் படங்களை பரப்புவோர் உள்ளிட்ட கிரிமினல்களை குறிவைத்து ஆபரேஷன் சக்ரா நடத்தப்பட்டிருக்கின்றன.
இம்முறை உலகளவிலான கிரிப்டோகரன்சி முறைகேடுகளை குறிவைத்து சிபிஐ களமிறங்கியது. மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், பீகார், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் 76 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது.
சிபிஐ மட்டுமன்றி மத்திய நிதி புலனாய்வு நுண்ணறிவு துறையினர், தனியார் துறையின் சைபர் வல்லுநர்கள், உள்ளூர் போலீஸார் உள்ளிட்டோரும் சிபிஐக்கு உதவியாக ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சோதனை நடைபெற்ற இடங்களில் பலநூறு கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி மோசடிக்கான ஆதாரங்கள் அடங்கிய செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்குகள், சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இமெயில் கணக்குகள் முதல் வங்கி கணக்குகள் வரை பலதும் முடக்கப்பட்டன. உலகளாவிய கிரிப்டோகரன்சி மோசடி கும்பல்களின் வலையும் கண்டறியப்பட்டன. அவை குறித்து உரிய நாடுகளின் உளவு அமைப்புகளுடன் சிபிஐ பகிர்ந்துகொண்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!
மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!
’லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!
வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!
அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!