‘அயோத்தி ராமர் கோயில் வெடி வைத்து தகர்க்கப்படும்...’ மிரட்டல் விடுத்த ‘தாவூத் இப்ராஹிம் கூட்டாளி’ கைது

By காமதேனு

அயோத்தி ராமர் கோயில் வெடிவைத்து தகர்க்கப்படும் என்று மிரட்டல் விடுத்த பீகார் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலத்த பாதுகாப்பு நடைமுறைகளுடன், அயோத்தி ராமர் கோயிலுக்கான குடமுழுக்கு வைபவம் இன்று அரங்கேற உள்ளது. பிரதமர் மோடி, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட தேசத்தின் உச்ச பாதுகாப்பு வளையத்தில் இருப்பவர்கள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். சாமானிய பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சூழலில், முற்றிலும் பலதுறை பிரபலங்கள் மட்டுமே பங்கேற்பதாலும் பல அடுக்கிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் அயோத்தியில் செய்யப்பட்டுள்ளன.

மின்னொளியில் அயோத்தி ராமர் கோயில்

விவிஐபிக்களுக்கான பிரத்யேக பாதுகாப்பு, உத்திரபிரதேச மாநில கமாண்டோக்கள், சிஆர்பிஎஃப், மாநில அதிரடிப்படை, வழக்கமான சட்டம் ஒழுங்கு போலீஸார் என ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக அயோத்தி நகர் முழுக்க சுமார் 400க்கும் மேலான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ட்ரோன் வாயிலான தாக்குதலை தடுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், போலீஸாரின் கேமரா பொருத்தப்பட்ட கண்காணிப்பு ட்ரோன்கள் அயோத்தி முழுக்க கண்காணித்து வருகின்றன.

இவற்றுக்கு மத்தியில் ராமர் கோயிலை தகர்க்கப்போவதாக வெளியான மிரட்டல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பீகார் மாநிலத்தின் அவசர உதவி அழைப்புக்கான எண் 112 என்பதை தொடர்பு கொண்ட மர்ம நபர் தன்னை பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி சோட்டா ஷகீல் என தெரிவித்தார். மேலும், ஜன.22 அன்று அயோத்தி ராமர் கோயில் வெடி வைத்து தகர்க்கப்படும் என்ற மிரட்டலோடு அழைப்பைத் துண்டித்தார்.

அயோத்தியில் பலத்த பாதுகாப்பு

இதனையடுத்து களத்தில் இறங்கிய மாநில சைபர் க்ரைம் போலீஸார், அராடியா மாவட்டத்தில் வசிக்கும் இன்டெகாப் ஆலம் என்கிற 21 வயது இளைஞரை கைது செய்தனர். இது தொடர்பான தகவலை அராரியா எஸ்பி அசோக் குமார் சிங் ஞாயிறு அன்று உறுதி செய்தார். அந்த இளைஞரிடமும், அவரை சார்ந்தோரிடமும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்டெகாப் ஆலம் என்ற அந்த இளைஞர் இதுவரை குற்றப்பதிவேடுகளில் இடம் பெறவில்லை. இதனையடுத்து அந்த இளைஞரின் இதர தொடர்புகள் குறித்தும், அவரது மனநிலை ஆரோக்கியத்தை உறுதிசெய்யும் மருத்துவ பரிசோதனைக்கும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE