கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு 60 நாட்களில் தண்டனை: தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் உறுதி

By KU BUREAU

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த 23 வயது பட்டதாரி பெண், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது பெற்றோர் இருவரும் தொழிலாளிகள்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக ஊருக்கு வந்த அந்தப் பெண்ணை, தெற்குக்கோட்டையைச் சேர்ந்த கவிதாசன்(25) என்பவர் தனியாகப் பேச அழைத்துள்ளார். ஆனால், அந்தப் பெண் மறுத்ததால், அவரை வலுக்கட்டாயமாக ஆளில்லாத பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளார்.

அங்கு கவிதாசன், அவரது நண்பர்களான பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த திவாகர்(26), பிரவீன்(20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து, அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அதை செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கவிதாசன் மீது 2020-ல் விவசாயி ஒருவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதேபோல, பிரவீன் மீது கஞ்சா வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் சீர்திருத்தப் பள்ளியிலும், மற்ற 3 பேரும் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக எஸ்.பி. ஆசிஷ் ராவத் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, "இந்த வழக்கை 60 நாட்களில் முடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம். முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய, ஆட்சியருக்குப் பரிந்துரை செய்துள்ளோம்" என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE