நிதிமோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் உட்பட 3 பேரை ஆக.28 வரை சிறையிலடைக்க உத்தரவு!

By KU BUREAU

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவை வரும் 28-ம் தேதி வரை 14 நாட்கள் சிறையிலடைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் ஃபண்ட் லிமிடெட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்புத் தொகை உள்ள உறுப்பினர்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் சுமார் ரூ.525 கோடியை திருப்பிக் கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், பாதிப்புக்குள்ளான 144 முதலீட்டாளர்கள் தங்களிடம் ரூ.24.5 கோடி பணத்தை பெற்று மோசடி செய்துவிட்டதாக சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தனர். அதன்படி அப்பிரிவு போலீஸார் கடந்த 12-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை, தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் ஃபண்ட் லிமிடெட் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன இயக்குநர்கள் குணசீலன் புதுக்கோட்டையிலும், மகிமை நாதன் சென்னையிலும் இன்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரும், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, பண மோசடி எதுவும் செய்யவில்லை என்றும், அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. வயது முதிர்வு மற்றும் முதுகு தண்டுவட பிரச்சினை உள்ளிட்ட உடல் நல பிரச்சினை உள்ளதாக தேவநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில், வழக்கு விசாரணையின் இருப்பதால் எந்த நிவாரணமும் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, தேவநாதன் யாதவ் உள்பட மூவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 28 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE