தொடரும் வேதனை... முதியவர்களை தவிக்கவிடும் வாரிசுகள்... மதுரை மருத்துவமனையில் அதிகரிக்கும் சம்பவங்கள்!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கும் வயதானவர்களை அவர்களின் குடும்பத்தினர் பலரும் கைவிட்டு சென்றுவிடும் மனிதநேயமற்ற செயல்கள் அடிக்கடி நடப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு உள் நோயாளிகளாக தினமும் 3,500க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வார்டில் உதவிக்கு ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால், சிலர் முதியவர்களை சிகிச்சைக்கு அனுமதித்துவிட்டு உடனிருக்காமல் சென்று விடுகின்றனர்.

அப்படிப்பட்டவர்களை உறவினர்கள் இல்லாவிட்டாலும் மருத்துவமனை பணியாளர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் குணமடைந்தப்பிறகு கூட அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்ல வருவதில்லையாம். அதனால் அதன்பிறகு மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையினர், சமூகநலத்துறையினர் உதவியுடன் உறவினர்களை அழைத்து கட்டாயப்படுத்தி முதியவர்களை அனுப்பி வைக்கின்றனர்.

இதுகுறித்து சுகாதார செயற்பாட்டாளர் வெரோனிகா மேரி கூறுகையில், "சொத்துகளை விரும்பும் சந்ததியினர் மூத்த குடிமக்களைக் கவனிக்காமல் புறக்கணிக்கும் சம்பவங்கள் தற்போது அதிகளவு நடக்கிறது. முதியோர்களை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இருக்கும்நிலையில் ஒரு புறமும் சொத்துகளை எழுதி வாங்கியப்பிறகு அவர்களுக்கான அடிப்படை சிகிச்சைகள், பராமரிப்புகள் மறுக்கப்படுகிறது.

சமீபத்தில் கூட மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி காலில் ஏற்பட்ட காயத்திற்காக அவரது குடும்பத்தினர் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன்பிறகு மூதாட்டிக்கு உடனிருந்து கவனித்து கொள்ள உறவினர்கள் யாரும் வரவில்லை.

காயம் குணமடைந்ததும் டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். அப்போது மருத்துவமனை சார்பாக மூதாட்டியின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்தும் யாரும் வரவில்லை. அதனால், மருத்துவமனை நிர்வாகம், போலீஸார், சமூகநலத்துறை உதவியை நாடியுள்ளனர்’’ என்றார்.

இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மூதாட்டி தன்னுடைய வீட்டை, தனது மகன் வழி குடும்பத்தினருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். அதனால், மகள் குடும்பத்தினர் இவரை கவனிக்க வரவில்லை. வீட்டை எழுதி வாங்கிய மகன் குடும்பத்தினரும் வர மறுப்பதால் போலீஸாரை வைத்து பேசிப்பார்த்தோம். அப்படியிருந்தும் மூதாட்டியை அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் யாரும் வரவில்லை. அதனால் சமூகநலத்துறையிடம் மூதாட்டியை ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

ஆனால் மூதாட்டியின் பேரனோ, ‘‘அனைவரும் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். நான் சென்னையில் பணிபுரிகிறேன். நான் வந்தபிறகுதான் டிஸ்சார்ஜ் செய்ய முடியும் என்கிறேன். அதற்கு ஒப்புக்கொள்ளாமல் மருத்துவமனை நிர்வாகம் நெருக்கடி கொடுக்கிறது. அவர்கள் வயதானவர்களை வைத்து சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்வதிலே குறியாக உள்ளனர், ’’ என்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் தம்பதி கைது!

குட் நியூஸ்... ரூ.400க்கு சமையல் சிலிண்டர்; ரூ.5 லட்சம் காப்பீடு; முதல்வர் அறிவிப்பு!

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் படையின் 2வது தளபதி பலி!

புது கெட்டப்பில் விஜய்சேதுபதி... வைரலாகும் வீடியோ!

இன்று காலை தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அதிரடி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE