நிதி மோசடி புகார் - சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் திருச்சியில் கைது!

By KU BUREAU

திருச்சி: நிதி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் சென்னை குற்றபிரிவு போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டார். இவர் மக்களவைத் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தனியார் தொலைக்காட்சி உரிமையாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவராகவும் உள்ள தேவநாதன் யாதவ், சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் ‘தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட்’ என நிதி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். 1872 ஆம் ஆண்டு முதல் இந்த நிதி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களை ரூ. 525 கோடிக்கு ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் சென்னை குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருச்சியில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ், மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். இத்தொகுதியில் 4 லட்சத்து 27 ஆயிரத்து 677 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வெற்றி பெற்றார். ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 788 வாக்குகள் மட்டுமே பெற்ற தேவநாதன் யாதவ் மூன்றாம் இடம் பிடித்தார். தேர்தலுக்கு முன்பே இந்த நிதி மோசடி புகார் பூதாகரமான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க அப்போதே பலரும் புகார் அளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE