திருவள்ளூர்: திருமணத்தை மீறிய உறவின் காரணமாக திருவள்ளூர் பஜார் பகுதியில் உள்ள காய்கறிக் கடையில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு பார்வதி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருந்த நிலையில் சுரேஷுக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சுரேஷுக்கும், பார்வதிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சுரேஷ், திருவள்ளூர் பஜார் பகுதியில் நடத்தி வந்த காய்கறிக் கடையில் கடந்த 9ம் தேதி ராஜேஸ்வரி வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார்.
இதனால், கோபமடைந்த சுரேஷின் மனைவி பார்வதி, புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயா, மோகன் உள்ளிட்ட 6 பேருடன் காய்கறிக் கடைக்கு வந்து, ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், தீக்காயமடைந்த ராஜேஸ்வரி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக கைதான சுரேஷ், சுரேஷின் மனைவி பார்வதி, விஜயா, நதியா, லட்சுமி, மோகன், முரளி, சங்கர் ஆகிய 8 பேர் மீதான கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக திருவள்ளூர் டவுன் போலீஸார் மாற்றம் செய்துள்ளனர். இந்த நிலையில், காய்கறிக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான, ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
» விழுப்புரம் | அரசுப் பள்ளியில் கொடிக்கம்பத்தை உடைத்தெறிந்த சமூக விரோதிகள்
» சென்னை விமான நிலையத்தில் அரிய வகை குரங்கு, பறக்கும் அணில்கள், ஆமைகள், மலைப் பாம்புகள் பறிமுதல்