கும்பகோணம்: இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில் சிவலிங்கம் திருட்டு

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயிலில் இருந்த சிவலிங்கம் திருடுபோயுள்ளது. இது தொடர்பாக சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இன்னம்பூர் சுகந்த குந்தளாம்பிகை உடனாய எழுத்தறிநாதர் கோயில், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ளதாகும். இக்கோயிலின் வடமேற்கு மூலையில், அரை அடி உயரம் கொண்ட சிவலிங்கம் மற்றும் விநாயகர் சிலைகள் இருந்தன. அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பூஜைகள் செய்வது போல், இந்த தெய்வங்களுக்கும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று, இந்தக் கோயிலின் சிவாச்சாரியார் முத்துக்குமார், வழக்கம் போல் பூஜை செய்யச் சென்றபோது, அங்கிருந்த அரையடி உயரம் உள்ள சிவலிங்கம் மற்றும் விநாயகர் சிலைகள் காணாமல் போனது தெரியவந்தது. இது தொடர்பாக, சுவாமிமலை கோயில் நிர்வாகத்திற்கு முத்துக்குமார் தகவல் அளித்தார்.

அதன் பேரில் சுவாமிமலை கோயில் கண்காணிப்பாளர் வி.பழனிவேல், சிலைகள் மாயமானது குறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீஸார் இன்று காலை கோயிலுக்குச் சென்று பார்த்தபோது. அங்கு விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது. அரையடி சிவலிங்கம் மட்டும் திருடுபோனது தெரியவந்தது. இது தொடர்பாக சுவாமிமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE