கரூர்: வீட்டு மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட பழையஜெயங்கொண்டம் பேரூராட்சி செயல் அலுவலரும் அவருக்கு உடந்தையாக இருந்த அலுவலக உதவியாளரும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி செயல் அலுவலர் கே.பி.ராஜகோபால். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இன்று பணி மாறுதலில் செல்லவிருந்தார். இந்த நிலையில், பூவம்பாடியைச் சேர்ந்தவர் குமரேஷ் என்பவர் புதிதாக கட்டும் வீட்டு மனைக்கு வரி நிர்ணயம் செய்ய பேரூராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். அவரிடம் செயல் அலுவலர் கே.பி. ராஜகோபால் ரூ.20,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் தர விரும்பாத குமரேஷ், இது குறித்து கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று மதியம் குமரேஷ் ரூ.17,500 லஞ்சப் பணத்தை கே.பி.ராஜகோபாலிடம் வழங்கினார்.
அப்போது அங்கு மாறுவேடத்தில் பதுங்கியிருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு திருச்சி டிஎஸ்பி-யான மணிகண்டன் தலைமையிலான போலீஸார், செயல் அலுவலர் ராஜகோபாலையும் அலுவலக உதவியாளர் ம.சிவகுமாரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
» கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைப்பேன்: போலீஸாருக்கு மம்தா பானர்ஜி கெடு