திருநங்கை அப்சராவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: பிரபல யூடியூபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

By காமதேனு

அதிமுக செய்தித் தொடர்பாளரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக செய்தித் தொடர்பாளர் அப்சரா

சென்னையைச் சேர்ந்தவர் திருநங்கை அப்சரா ரெட்டி. இவர் அதிமுகவின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும், பிரபலமான மாடலாகவும் உள்ளார். இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இவர் குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல மாடலிங் நிறுவனத்தை நடத்தி வரும் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் அவதூறாக பேசி 10-க்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, அவர் மீது அப்சரா ரெட்டி மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார். அதில், தன்னை குறித்து வதந்திகளைப் பரப்பி வரும் ஜோ மைக்கேல் ரூ.1.25 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். தன்னைப் பற்றி வெளியிடப்பட்ட 10 வீடியோக்களையும் நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அப்சரா, ஜோ மைக்கேல்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்சராவுக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என ஜோ மைக்கேல் பிரவீனுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், யூடியூபில் கருத்துகளை வெளியிடும் உரிமை நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

யூடியூபர் வெளியிட்ட அவதூறு கருத்துகளால் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது என்று அப்சரா ரெட்டி புகார் தெரிவித்திருந்தார். எனவே, அப்சரா ரெட்டிக்கு எதிரான வீடியோக்களை யூடியூபில் இருந்து கூகுள் நிறுவனம் ஏற்கெனவே நீக்கியதால், நஷ்ட ஈடு வழங்குவதில் இருந்து தப்பியது.

கடந்த 2019-ம் ஆண்டு அப்சரா, போலீஸில் அளித்த புகாரின் அடிப்படையில் ஜோ மைக்கேல் பிரவீன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யூடியூபர் ஜோ மைக்கேல் நடத்தி வரும் மாடல் இதழியில் தன்னுடன் சேர்ந்து பணியாற்றுமாறு அப்சரவை அனுகியதாகவும். அதனை அவர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே ஜோ மைக்கேல் அப்சராவை தாக்கி பேசி வந்ததாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE