தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ரூ.2 கோடி மதிப்பிலான பழமையான ஐம்பொன் சிலையை விற்க முயன்ற 7 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழமையான சிலையை சிலர் கடத்திச் செல்வதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் ராஜேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பரமசிவம், பாண்டியராஜன், காவலர் சிவபாலன் ஆகியோர் கொண்ட குழுவினர், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே மேலதிருவிழாபட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழமையான 2.5 அடி உயர உலோகத்தால் ஆனபெருமாள் சிலையை கைப்பற்றினர்.
» 2,553 மருத்துவர் இடங்களை நிரப்ப நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
» 5 பல்கலை. துணைவேந்தரை உடனே நியமிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
இதையடுத்து காரில் இருந்தவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள், சென்னை அரும்பாக்கம் ஜெகநாதன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன்(52), தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அலமங்குறிச்சியை சேர்ந்த ராஜ்குமார்(36), திருவாரூர் மாவட்டம் இனாம்கிளியூரைச் சேர்ந்த தினேஷ்(28), ஜெய்சங்கர்(58), கடலூர் மாவட்டம் நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்த விஜய்(28) என்பது தெரியவந்தது.
மேலும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த ஹாரிஸ்(26), காட்டுமன்னார்குடி அருகே கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்(26) என்பதும் தெரியவந்தது.
அவர்களிடம் இந்த சிலை குறித்து விசாரித்துபோது, இனாம்கிளியூரைச் சேர்ந்த தினேஷின் தந்தை ஆனந்தகுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ளதொழுவூர் ஆற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உலோகச் சிலை கிடைத்ததாக தெரிகிறது.
அந்த சிலையை ஆனந்தகுமார் தனது மாட்டு கொட்டகையில் மறைத்து வைத்து இருந்ததாகவும், அவர் இறந்த பிறகு அந்தசிலையை எடுத்து நண்பர்களுடன் சேர்ந்து விற்க முயன்றதாகவும் தினேஷ் தெரிவித்துள்ளார். மேலும், அந்த சிலையை சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மூலம் ரூ.2 கோடிக்கு விற்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சிலையை பறிமுதல் செய்த போலீஸார், 7 பேரையும் கைது செய்து கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர். இந்த சிலையானது 15 - 16-ம் நூற்றாண்டு சோழர்கள் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.