ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கழுத்தை அறுத்து, ஆசிட் ஊற்றி படுகொலை - பிஹார் அதிர்ச்சி

By KU BUREAU

பீகார்: பெகுசராய் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கழுத்தை அறுத்து, ஆசிட் ஊற்றி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பெகுசராய் மாவட்டத்தில் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒரு தம்பதியும் அவர்களது 10 வயது மகளும் அவர்களது வீட்டில் இரத்த வெள்ளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு, முகத்தில் அமிலம் ஊற்றி கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த தம்பதியின் மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் 40 வயதான சஞ்சீவன் மஹ்தோ, அவரது மனைவி சஞ்சிதா மற்றும் அவர்களது 10 வயது மகள் சப்னா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் 7 வயது மகன் அங்குஷ் குமார் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சஞ்சீவன் மஹ்தோ குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை இரவு ஒரு பூஜையைக் கொண்டாடிவிட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு இனிப்புகளை வழங்கிவிட்டு உறங்க சென்றனர். இன்று காலை 7 மணியளவில் இவர்கள் கதவைத் திறக்காததால், பக்கத்து வீட்டுக்காரர்கள் கதவை தட்டினர். ஆனால் கதவு உள்புறமாக மூடப்பட்டிருந்ததால் அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது, ​​​​இவர்கள் ஒரு அறையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டனர்.

இந்த கொலைக்கு உள்ளூர்வாசியான போலா தாஸ் தான் காரணம் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். சஞ்சீவன் மஹ்தோ, போலாவிடம் இருந்து நிலம் வாங்கியதால், இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போலா தாஸ், மஹ்தோ குடும்பத்திற்கு எதிராக ஒரு வழக்கையும் தாக்கல் செய்துள்ளார்.

விசாரணைக்காக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சஞ்சீவன் மஹ்தோவின் முதல் மனைவி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அவரை விட்டுச் சென்றுவிட்டார். அதன் பிறகு அவர் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு மறுமணம் செய்து கொண்டார். அவருக்கு முதல் திருமணத்தில் 20 வயது மகன் உள்ளார், அவர் தனது தாத்தா பாட்டியுடன் அருகில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE