லியோ திரைப்பட டிரெய்லரில் ஆபாசமாக வசனம் பேசிய நடிகர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்ககோரி அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. இந்தப்படம் வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த டிரெய்லரில் விஜய் ஆபாச வசனம் பேசி இருப்பதைக் பார்த்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர் விஜய் பேசிய ஆபாச வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளருக்கு எதிராக கண்டனங்கள் குரல்கள் வலுத்து வருகிறது.
அதனை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் லலீத் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் அதன் தலைவர் வெங்கடேஷ் குமார், இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், லியோ திரைப்படத்தின் டிரெய்லரில் விஜய் பேசிய ஆபாச வசனம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்த டிரெய்லரை தணிக்கை செய்யாமல் வெளியிட்டது சட்டப்படி குற்றம். அதிக இளைஞர்களை ரசிகர்களாக கொண்டுள்ள நடிகர் விஜய் அவர்களுக்கு அறிவுரை கூறும் படங்களில் நடிக்காமல், தவறான பாதைகளில் கொண்டு செல்லும் வகையில் நடித்திருப்பது கண்டிக்கத்தது.
எனவே உடனடியாக லியோ திரைப்படத்தில் அமைந்துள்ள ஆபாசமான வசனத்தை நீக்கி, மறுதணிக்கை செய்து படத்தை வெளியிட வேண்டும். இல்லையென்றால் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளின் முன்பு போராட்டம் நடக்கும். ஆபாச வசனம் பேசிய நடிகர் விஜய் மற்றும் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் லலீத் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.