புதுச்சேரி தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை: போலீஸார் விசாரணை

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரியில் தங்கும் விடுதி ஒன்றில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடக்கு ரதவீதி கொத்தனார் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (60). வீட்டிலேயே தங்க நகை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி (55), மகன் சுந்தரேசன் (25), மகள் சவுந்தர்யா (22). கடந்த 7-ம் தேதி குடும்பத்தினர் அனைவரும் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். புதுச்சேரி முத்து மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

2 நாட்கள் புதுச்சேரியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்த்துவிட்டு, அதன்பிறகு திண்டுக்கல் திரும்பவும் திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. இதற்காக அவர்கள் தங்கும் விடுதியில் 2 நாட்கள் தங்குவதற்கு முன்பதிவும் செய்திருந்தனர். ஆனால், நேற்று சந்திரசேகரன், அவர் தங்கி இருந்த விடுதி ஊழியர்களிடம் மேலும் ஒரு நாள் தங்குவதற்கு அனுமதி கோரியுள்ளார்.

அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு அறையை காலி செய்ய வேண்டும் என தெரிகிறது. ஆனால் அவர்கள் மதியம் 1 மணிக்கு மேலாகியும் அறையை காலி செய்யவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதியின் ஊழியர்கள் சந்திரசேகரன் தங்கி இருந்த அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.

வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் இது குறித்து பெரியகடை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த சீனியர் எஸ்பி நாரா சைதன்யா, கிழக்குப் பகுதி எஸ்பி லட்சுமி சவுஜன்யா, பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீஸார் அறை கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அறையில் சந்திரசேகரன் உள்ளிட்ட 4 பேரும் அறையில் பிணமாக கிடந்துள்ளனர்.

அவர்கள் அருகில் 3 குளிர்பான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதை கண்ட போலீஸார், விடுதி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சந்திரசேகரன் உள்ளிட்ட 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும் என போலீஸார் தரப்பில் குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக புதுச்சேரி போலீஸார், திண்டுக்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களும் சம்மந்தப்பட்ட சந்திரசேகரன் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து புதுச்சேரி பெரியக்கடை போலீஸாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE