மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துணைமேயர் நாகராஜனைக் கொலை செய்ய ஆட்களை அனுப்பியது திமுக வட்டச் செயலாளர் என புகார் கிளம்பியுள்ளது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி துணை மேயராக இருப்பவர் நாகராஜன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு உறுப்பினரான இவர் வீடு, ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயில் அருகே உள்ளது.
நேற்று மாலை சுமார் 6.50 மணிக்கு வீட்டில் அவரும், அவரது மனைவியும் இருந்தனர். அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவரது வீட்டுக்குள் நுழைய முயன்றனர். வீட்டுக்கு வெளியில் நின்றிருந்த புல்லட் உள்ளிட்ட இரு டூவீலர்களை அடித்து சேதப்படுத்திய அந்த கும்பல் , எதிரிலுள்ள அவரது அலுவலக கதவையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பினர்.
இதுகுறித்து துணை மேயர் நாகராஜன், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தார். போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த மாநகர மார்க்சிஸ்ட் கட்சியினர் துணை மேயர் வீடு முன்பு திரண்டனர்.
இச்சம்பவத்தை கண்டித்து ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் அவர்கள் அமர்ந்து மறியல் செய்தனர். போலீஸார் அவர்களிடம் சமரசம் பேசினர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் துணைமேயர் நாகராஜன் புகார் செய்துள்ளார். அதில், " மாலை 6.45 மணிக்கு நான் வீட்டில் இருந்து அலுவலகப் பணிக்காக கிளம்பிய போது, நேதாஜி தெருவைச் சேர்ந்த லோகேஸ் நீண்ட வாளுடனும் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 3 பேர் கையில் கத்தி,வாள்களுடன் என்னை நோக்கி வந்தனர்.
'திமுக வட்டச் செயலாளர் கண்ணன், முத்துவேலுக்கு எதிராக அரசியல் பண்றயாடா, உன்னைக் கொன்று புதைக்காமல் விடமாட்டோம்' என்று கத்திக் கொண்டே 'செத்துத் தொலைடா' என்று என் கழுத்தை நோக்கி லோகேஷ் வெட்டினார். நான் தலையைச் சாய்த்துக் கொண்டதால் உயிர் பிழைத்தேன்.
அங்கு நின்ற என் மனைவி என்னை வீட்டிற்குள் இழுத்து விட்டார். அப்போது லோகஷீடன் வந்திருந்த மூவரும் கையில் வைத்திருந்த வாளைக் கொண்டு என்னை வெட்ட முயன்றனர். ஆனால், அது முடியாமல் போனதால் எனது பைக், எனது மனைவியின் வாகனம், வீடின் கதவை வெட்டிச் சேதப்படுத்தினர்.
இந்த சத்தம் கேட்டு மக்கள் கூடவும், கையில் வைத்திருந்த ஆயுதங்களைக் காண்பித்து அருகில் வந்தால் கொன்று விடுவோம் என்று மிரட்டிக் கொண்டே ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு டீக்கடை அருகே இருந்த என் அலுவலகத்திற்குச் சென்றனர்.
அங்கு எனது அலுவலக கண்ணாடிகளையும் சேதப்படுத்தி விட்டு ஓடிவிட்டனர். இந்த சம்பவம் திமுக வட்டச் செயலாளர் கண்ணன், முத்துவேல் ஆகியோரின் அரசியல் காரணமாக தூண்டிவிட்டு நடந்த சம்பவமாகும். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் துணைமேயர் மீது தாக்குதல் நடத்தியதாக லோகேஷ்(20), முகமது சீனி இஸ்மாயில்(20) ஆகியோரை போலீஸார பிடித்துள்ளனர். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் இன்று கண்டனக் கூட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சி திறப்பு விழா கல்வெட்டுக்களில் தன் பெயர் இடம் பெறவில்லை என்று துணைமேயர் நாகராஜன் ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், அவர் மீது திமுக வட்டச் செயலாளர் தூண்டுதலின் பேரில் கொலை முயற்சி நடந்த சம்பவம் மதுரை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.