மகாராஷ்டிராவில் ஆர்தர் சிறையில் கைதிகளுக்கு போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரே போதை பொருள் சப்ளை செய்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மும்பை நகரில் ஆர்தர் சாலை சிறையில் கைதிகளுக்கு போதை பொருள் சப்ளை செய்யப்படுகிறது என போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, மும்பை போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சூழலில் போலீஸ் கான்ஸ்டபிள் விவேக் நாயக் என்பவர் வழக்கம்போல் நேற்று பணிக்கு வந்துள்ளார்.
அவரிடம் சிறையின் வாசல் பகுதியில் வைத்து சோதனை செய்யப்பட்டது. எனினும், உள்ளாடையில் சோதனையிட அவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மூத்த அதிகாரிகள் முன்னிலையில், சோதனை செய்யப்பட்டது. அப்போது உள்ளாடையில் போதை பொருளை அவர் மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. இதனால் அவர் சிறை கைதிகளுக்கு போதை பொருட்களை சப்ளை செய்தது உறுதியானது.
விசாரணையின்போது, ராகுல் என்பவர் கூறியதன் பேரில் ரஷீத் என்ற கைதிக்கு போதை பொருட்களை அவர் சப்ளை செய்ய முயன்றது தெரிய வந்தது. மேலும், அவரிடம் இருந்து போதை பொருட்கள் அடங்கிய 8 கேப்சூல்களும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து விவேக் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 5 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது. மும்பையில் சிறை கைதிகளுக்கு போதை பொருள் வினியோகிப்பில் கான்ஸ்டபிள் ஒருவரே ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.