பேருந்து நடந்துநர் மீது பாம்பை வீசிய பெண் கைது - குடிபோதையில் ரகளை

By KU BUREAU

ஹைதராபாத்: தெலங்கானாவில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், அரசுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்தியதுடன், பெண் நடத்துநர் மீது பாம்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் வித்யாநகரில் நேற்று மாலை அரசுப் பேருந்தின் பின்புற கண்ணாடி மீது பெண் ஒருவர் மது பாட்டிலை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார். இது குறித்து பேருந்தின் பெண் நடத்துனர் அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது, ​​அவர் தனது பையில் இருந்து ஒரு பாம்பை எடுத்து நடத்துநர் மீது வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் நடத்துநர் உட்பட பேருந்தில் இருந்த அனைவரும் பீதியில் உறைந்தனர். இருப்பினும் இதனால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து நல்லகுண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், வித்யாநகர் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாததால் அந்தப் பெண் பேருந்து மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்றும் அரசுப்போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புகாரின் அடிப்படையில், அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் மது அருந்திய நிலையில் இருந்ததாகவும், பேருந்தை நிறுத்தாததால் அவர் நடத்துநர் மீது பாம்பை வீசினார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

அந்தப் பெண்ணின் கணவர் பாம்புகளைப் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். 'நாக பஞ்சமி'யை முன்னிட்டு அப்பெண் பாம்பை தன்னுடன் எடுத்துச் சென்றார் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE