‘கோயிலை பூட்டிவைப்பது கடவுளை சிறைவைப்பதற்கு சமமானது’ - உயர் நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு 

By KU BUREAU

மதுரை: கோயிலை பூட்டிவைப்பது கடவுளை சிறை வைப்பதற்கு சமம் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை உத்தபுரம் கோயிலை திறக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் உத்தபுரத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘உத்தபுரத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோயிலை திறந்து, நாள்தோறும் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், ‘இரு சமுதாயத்தினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கோயிலைப் பூட்டியதால், சாமிக்கு பூஜைகள் செய்ய முடியவில்லை. கோயிலைப் பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம். குற்ற வழக்கில் சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது.

இந்த வழக்கில் சாமிக்கு தேவையான பூஜை உள்ளிட்ட தேவைகள் கிடைக்கப் பெறவில்லை. கோயிலை காலவரையின்றி மூடி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கக் கூடாது. இந்த வழக்கில் யாருக்கு உரிமை உள்ளதோ, அவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.


உத்தபுரம் கோயிலை ஒரு சமுதாயத்தினர் மூடியுள்ளனர், இதில் அதிகாரிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வழக்கில் கோயிலைத் திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தர விடப்படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, எந்த கோயிலையும் பூட்டக் கூடாது. இதில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், சம்பந்த பட்டவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம்’ என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE