ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - பள்ளி தாளாளர் அதிரடி கைது

By KU BUREAU

சென்னை: படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளர் அருண்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த வாரம் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினருக்கு சதீஷ் என்ற பெயரில் ஒரு மா்ம கடிதம் வந்தது. அதில், ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையைக் கடத்துவதுடன், அவருடைய குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதனையடுத்து, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தனியார் பள்ளி தாளார் அருண்ராஜ் என்பவரை செம்பியம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அருண்ராஜ் தனது பள்ளியில் பணிபுரிந்த வாகன ஓட்டுநர் சதீஷ் என்பவர் பெயரில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலூர் முதன்மை கல்வி அலுவலருக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் ஏற்கெனவே பள்ளித் தாளாளர் அருண்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக ஓட்டுநர் சதீஷ் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சதீஷை பழிவாங்க நினைத்து அருண்ராஜ், அவரது பெயரில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE