கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சிக்குட்ப்பட்ட துக்காம்பாளையத்தெருவில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர், தாங்கள் பணிபுரிந்து வந்த கடைக்குப் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 550 கிலோ குட்கா புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இருசக்கர வாகன ரோந்து போலீஸார் துக்காம்பாளையத்தெரு பகுதி வழியாக ரோந்து பணிகளை மேற்கொண்டிருந்த போது, அந்த பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுக் கொண்டிருந்துள்ளனர். அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் வேலைப்பார்க்கும் கயிறு கடைக்கு பின்னால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக ரோந்து போலீஸார், கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீஸார், அந்த இடத்திற்குச் சென்று, அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான 550 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கோட்டாராம் மகன் ஜானுராம்(30) தீபாராம் மகன் பரஸ்ராம்(20) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், இவர்கள் இருவரும் பெங்களூருவில் இருந்து வேறு சில பொருட்களுடன் குட்கா புகையிலை பொருட்கள் பாக்கெட்டுக்களையும் பதுக்கி கும்பகோணத்திற்கு கொண்டு வந்து, அவற்றை தனி தாளில் மடித்து விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. குட்கா புகையிலைப் பொருட்கள் பதுக்கலை கண்டுபிடித்த ரோந்து பணிகளை மேற்கொண்டிருந்த போலீஸார் கலையரசன் மற்றும் ரகுராமனுக்கு டிஎஸ்பி கீர்த்திவாசன், வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
» எஸ்.ஐ பரசுராம் வீட்டில் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ கடிதம்: கர்நாடகாவில் பரபரப்பு
» பல்லடம் அருகே பல வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கொலை: போலீஸ் விசாரணை