முரசொலி அலுவலக வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பு... உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

By காமதேனு

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளித்த புகாரில், தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திமுக-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

முரசொலி அலுவலகம்

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, பஞ்சமி நிலம் அல்ல என அரசு அறிக்கை அளித்ததால், புகாரை முடிக்க முடிவெடுத்துள்ளதாக ஆணையம் கூறியதாகவும், ஆனால் திடீரென புகார் நிலுவையில்தான் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்களை புகார்தாரர் சமர்ப்பிக்கவில்லை எனவும் தெரிவித்தார். அரசியல் காரணத்திற்காக தேசிய எஸ்.சி. ஆணையம் இந்த புகாரை நிலுவையில் வைத்துள்ளதாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் குறிப்பிட்டார். ஆணையம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும், பஞ்சமி நிலமா இல்லையா என வருவாய்த் துறைதான் விசாரிக்க முடியுமே தவிர, தேசிய எஸ்.சி. ஆணையம் தலையிட முடியாது எனவும் தெரிவித்தார்.

தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி, பட்டா மற்றும் விற்பனை பத்திரம் ஆகியவை உரிமையாளரை முடிவு செய்வதற்கான இறுதியான ஆதாரம் அல்ல எனவும், ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது எனவும், தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். புகார்தாரர் சீனிவாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி ஆஜராகி, வழக்கு நிலுவையில் இருந்தபோது பட்டா வழங்கப்பட்டதாகவும், அதனால் ஆணையம் விசாரணை செய்வது சரியானது தான் என தெரிவித்தார். வில்லங்க சான்றிதழில் 1974ல் மாதவன் நாயர் பெயரோ, அஞ்சுகம் பதிப்பகம் பெயரோ இல்லை என்றும், திருவண்ணாமலை நிலம் தொடர்பாகத்தான் உள்ளதாக தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பளிப்பதாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அறிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

கனமழை எதிரொலி... அண்ணாமலை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

பத்திரம் மக்களே... இன்று 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

மழையால் பாதிப்பு... சென்னை புத்தகக்காட்சிக்கு இன்று விடுமுறை!

தமிழகத்தில் ஜன.12ம் தேதி பலூன் திருவிழா!

நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம்... இன்று தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE