அதிர்ச்சி... ஆற்றில் மிதந்து வந்த பீரங்கி குண்டை எடுத்த சிறுவன் வெடித்து சிதறி பலி

By காமதேனு

மேற்குவங்க மாநிலத்தில் ஆற்றில் அடித்து வரப்பட்ட இந்திய ராணுவத்திற்கு சொந்தமான பீரங்கி குண்டு வெடித்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராணுவம் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் காரணமாக இந்திய ராணுவத்திற்கு சொந்தமான முகாம் ஒன்று அடித்து செல்லப்பட்டது. இந்த முகாமில் வைக்கப்பட்டிருந்த சிறு பீரங்கிகளில் பயன்படுத்தும் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவை ஆற்றில் மிதந்து வரக்கூடும் என்பதால் அதனை எடுக்க வேண்டாம் என சிக்கிம் மாநில அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அண்டை மாநிலமான மேற்குவங்க மாநிலத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில், நேற்று மாலை சிறுவர்கள் சிலர் விறகுகள் சேகரிப்பதற்காக தீஸ்தா நதி அருகே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆற்றில் மிதந்து வந்த பீரங்கி குண்டை அவர்கள் வீட்டுக்கு எடுத்து வந்துள்ளனர். வீட்டில் அதனை அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அந்த வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் சாகினூர் ஆலம் என்கிற 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். படுகாயம் அடைந்த மேலும் 5 பேருக்கு ஜல்பைகுரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிக்கிம் வெள்ளம்

இதை அடுத்து தீஸ்தா நதியிலிருந்து கிடைக்கும் எந்த பொருட்களையும் எடுக்க வேண்டாம் என ராணுவமும் மாநில அரசும் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. மேக வெடிப்பு காரணமாக தீஸ்தா நதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 19 பேர் உயிரிழந்திருப்பதாக சிக்கிம் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதில் ஆறு பேர் ராணுவ வீரர்கள் ஆவர். மேலும் 16 ராணுவ வீரர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE